பார்சிலோனா கால்பந்துக் கிளப் அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் சுவாரஸ். கடந்த ஜனவரி மாதம் வலது காலில் காயம் ஏற்பட்டதால் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக லா லிகா நடப்பு சீசன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுவாரஸின் இழப்பு பார்சிலோனாவுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் வரும் 11ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் லா லிகா தொடரில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணிக்கும் ரியல் மாலோர்கா அணிக்கும் இடையேயான போட்டி 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக பார்சிலோனா அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பிய சுவாரஸ் இதுகுறித்து கூறுகையில், “தற்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். என் அணியினருடன் வழக்கம்போல் பயிற்சி பெற்று வருகிறேன். காயத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புவது எப்போதும் கடினம்.
அதற்கு பயம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மீண்டும் பயிற்சி மேற்கொள்வதை நான் ரசிக்கிறேன். லா லிகா பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
இருப்பினும் பார்வையாளர்களின்றி போட்டியில் விளையாடுவது சற்று விசித்திரமாகத்தான் இருக்கும்" என்றார்.