கரோனா வைரஸ் ஊரடங்கு கரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விளையாட்டு வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வதற்கான தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு இந்திய மகளிர் கால்பந்து அணி, கோவாவில் அமைக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு சூழலில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மேமால் ராக்கி கூறுகையில், “2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய மகளிர் அணி தகுதிப்பெற்றுள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இருப்பினும் இத்தொடரில் பிற அணிகளுடன் மோதுவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது. அதனால் நாங்கள் இப்போதிலிருந்தே எங்களது பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கோவாவில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீராங்கனைகள் மற்றும் அணி ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேசமயம் சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதும், அவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: முதல் வெற்றிக்காக போராடும் கோவா; தோல்வியைத் தவிர்க்கும் முனைப்பில் நார்த் ஈஸ்ட்