மாலே (மாலத்தீவு): தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் மாலத்தீவில் இன்று (அக். 4) தொடங்கியது.
இத்தொடரின் முதல் போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால், போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 1 - 0 என்று முன்நிலை வகித்தது.
நான்காம் இடத்தில் சேத்ரி
சுனில் சேத்ரி அடித்த இந்த கோலானது, அவரின் 76ஆவது சர்வதேச கோல் ஆகும். இதனால், அதிக சர்வதேச கோல்களை அடித்தவர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (111), லியோனல் மெஸ்ஸி (79), இராக் வீரர் அலி மபூத் (77) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 37 வயதான சேத்ரி, 121ஆவது போட்டியில் விளையாடி உள்ளார்.
அடுத்த போட்டி
இரண்டாம் பாதியின் 54ஆவது நிமிடத்தில், வங்கதேச வீரர் பிஸ்வந்த் கோஷ், இந்தியர் லிஸ்டன் கோலகோவை கடுமையாக தள்ளிவிட்டதால் சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன்பின்னர், 10 வீரர்கள் மட்டுமே வங்கதேச அணியில் விளையாடினர். இருப்பினும், வங்கதேச அணி 74 நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன்நிலை ஆக்கியது.
இதையடுத்து, யாரும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவானது. இந்தியா தனது போட்டியில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
இதையும் போட்டி: IPL 2021: டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு; ராயுடு அரைசதம்