மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயினிடம், சமீபத்தில் விராட் கோலியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "விராட் கோலியைப் பற்றி நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவரை போன்றவர்கள் நாம் விளையாடும் அணியில் இடம்பெற்றால் அவரை விரும்புவோம். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அவருடன் விளையாடுவது சற்று கடினம். அவர் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்வேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் டிம் பெயின், இந்திய அணி தேவையில்லாத கவனச்சிதறல்களை ஏற்படுத்திதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது எனக் கூறியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே, இந்திய அணி அவர்களின் திறன்களால் தான் வெற்றி பெற்றார்கள் என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.
32 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பிரிஸ்பெனில் பதிவு செய்தது. அந்த வெற்றிக்குப் பிறகு பலமுறை தோல்வி குறித்து டிம் பெயின் பேசி வந்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் டிம் பெயினை இந்திய ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பால் டேம்பரிங் முறைகேடு: மீண்டும் விசாரணை நடத்த தயார்!