மும்பை: ஆசிய உலக்ககோப்பை 2023 போட்டிகளுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ஆசிய கோப்பை 2023க்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் அந்த போட்டியானது நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதகுறித்து, மும்பையில் இன்று நடைபெற்ற பிசிசிஐயின் 91ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஷா, “பாகிஸ்தானுக்குச் செல்லும் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது, எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் 2023 ஆசிய கோப்பைக்கு போட்டி நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”2025 சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அது முடிவு செய்யப்பட்டதும் அது குறித்து தெரிவிக்கப்படும். எங்களின் மீடியா உரிமைகள் மூலம் நல்ல வருமானம் பெற்று வருகிறோம். எங்கள் வருமானம் அதிகரித்து வருவதன் மூலம் உள்நாட்டு வீரர்களும் அதிக பலன்களைப் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் 2012-13க்கு பிறகு இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் மோதிக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ind vs Aus Warm-Up Match: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி