மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 222 ரன்களை குவித்து வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது.
பட்லர் 3ஆவது சதம்: ராஜஸ்தான் அணி ஓப்பனர் ஜாஸ் பட்லர், 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 116 (65) ரன்களை குவித்து, இத்தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவுசெய்தார். அதேபோன்று, மற்ற வீரர்களான தேவ்தத் படிக்கல் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 54 (35) ரன்களையும், கேப்டன் சாம்சன் 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 46 (19) ரன்களையும் எடுத்தனர். டெல்லி சார்பில் கலீல் அகமது, முஸ்தஃபிஷூர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
அதிரடி ஓப்பனிங்: 223 ரன்கள் என்றாலும் அசால்டாக களமிறங்கிய டெல்லி அணி ஓப்பனர்கள், பவர்பிளே ஓவர்களில் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். டேவிட் வார்னர் 37 (27) ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 1 (3) ரன்களிலும் அவுட்டாக, பவர்பிளே முடிவில் 55/2 என்ற நிலையில், டெல்லி அணி இருந்தது. தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பிருத்வி ஷா - ரிஷப் பந்த் இணை ரன்களை சட சடவென குவித்தது.
நடுவரிசை தடுமாற்றம்: ஆனால், 10ஆவது ஓவரில் பிருத்வி ஷா 37 (27) ரன்களிலும், 12ஆவது ஓவரில் ரிஷப் பந்த் 44 (24) ரன்களிலும் ஆட்டமிழக்க டெல்லியின் ரன் வேகம் சற்று குறையத் தொடங்கியது. பின்னர், லலித் யாதவ் விரைவாக ரன் சேர்ந்து வந்தாலும், அடுத்த வந்த அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விரைவாக வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.
18ஆவது மெய்டன்: இருப்பினும், அடுத்து வந்த ரோவ்மேன் பாவெல் போல்ட் வீசிய 18ஆவது ஓவரில் 2 சிக்சர்களை அடித்து, ஆட்டத்தை கைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், 19ஆவது ஓவர் டெல்லி அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத லலித் யாதவ் மூன்றாவது பந்தில் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த மூன்று பந்துகளையும் குல்தீப் யாதவ் ரன் எடுக்காததால் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது.
சர்ச்சையான 3ஆவது பந்து: ஓபெட் மெக்காய் வீசிய கடைசி ஓவரில், முதல் மூன்று பந்துகளையும் பாவெல் சிக்சருக்கு பறக்கவிட, பார்வையாளர்கள் பரவசமானார்கள். ஆனால், அந்த 3ஆவது பந்து சற்று இடுப்பு உயரத்துக்கு வந்ததால், பாவெல் கள நடுவர்களிடம் நோ-பால் கேட்டு முறையிட்டார். ஆனால், நடுவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளததால், சற்று நேரம் மைதானம் பரபரப்பானது. இருப்பினும், 4ஆவது பந்தில் டாட், 5ஆவது பந்தில் டபுள்ஸ், 6ஆவது பந்தில் கேட்ச் என கடைசி மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டும் டெல்லி அணி எடுத்தது.
முதலிடத்தில் ஆர்ஆர்: இதனால், ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சஹால், மெக்காய் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும், டெல்லி அணிக்கு கடைசி வரை நம்பிக்கை அளித்த ரோவ்மேன் பாவெல் 15 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 36 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சதமடித்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி), டெல்லி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 4 தோல்வி) 6ஆவது இடத்திலும் உள்ளன.