ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (செப். 29) நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.
பின்னர் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மனீஷ் பாண்டேவும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பேர்ஸ்டோவ் ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன், பவுண்டரிகளை விளாச 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 53 ரன்களையும், டேவிட் வார்னர் 45 ரன்களை விளாசினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கு வகையில் ப்ரித்வி ஷா 2 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த ஷிகர் தவானும் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஷித் கானிடம் விக்கெட்டைக் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.