ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது. இதில் நேற்று (அக்.06) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், போட்டிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் பட்லர், "கடந்த மூன்று போட்டிகளில் எங்களது தொடக்கம் சரிவர அமையவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் தோல்வியை சந்தித்து வருகிறோம். பவர் பிளே ஓவர்களிலேயே நாங்கள் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை இழப்பது எங்களின் தொடர் தோல்விக்கு வழிவகுக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. அதேசமயம் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து விட்டால், பிறகு வெற்றி பெறுவது குறித்து யோசிக்க இயலாது" எனத் தெரிவித்தார்.
மும்பை அணிக்கெதிரான போட்டியில், பட்லர் 44 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 70 ரன்களைக் குவித்தார். ஆனால், இது நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி எடுத்த ஒட்டுமொத்த ஸ்கோரில் பாதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!