இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வரும் 28ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ''டி20 லீக் தொடர்களில் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உள்ளூர் வீரர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற விதிதான். ஒரு கிரிக்கெட்டராக இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க கடமைப்பட்டுள்ளேன். இளம் வீரர்களுக்கு ஓய்வறையில், அணி ஆலோசனைக் கூட்டத்தில் திட்டமிடுவதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பது டி20 லீக் போட்டிகள் ஆடுவதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பாடத்தினை வேறு எங்கும் கற்றுக்கொள்ள முடியாது.
கண்டி அணியில் சில மூத்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களோடு விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்.
டி20 போட்டிகளின் வருகை, பேட்ஸ்மேன்களுக்கான தரத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தான் ஜாம்பவான் வீரர்கள்.
ஒருவேளை நான் அவர்களுக்கு பந்துவீசினால் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபுல் பந்தினை வீசுவேன். விராட் கோலி பந்துவீசினால், அவரை பிஹைண்ட் ஸ்கொயர் ஆட கட்டாயப்படுத்துவேன். ஏனென்றால் அவர் ஃப்ரெண்ட் ஃபூட் ஆட முற்படுவார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!