நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணிகளிலும், எந்தவித மாற்றமுமின்றி கடந்தப் போட்டிகளில் ஆடிய அதே 11 வீரர்களுடன் களமிறங்கின.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி சென்னை அணியிடம் தர்மடி வாங்கியது. அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் லின் தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆனார். இதையடுத்து, ஹர்பஜன் வீசிய இரண்டாவது ஓவரில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆவுட் ஆனார்.
எப்போதும் கொல்கத்தா அணிக்கு நல்லத் தொடக்கத்தை தரும் இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பவுலிங் செய்ய வந்த தீபக் சஹாரின் பந்துவீச்சில் நிதிஷ் ராணாவும் டக் அவுட் ஆக, மறுமுனையில் இரண்டு பவுண்டரிகளை அடித்த உத்தப்பா 11 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதனால், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்களை எடுத்தது. பின்னர், பொறுப்புடன் ஆடிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, சுப்மன் கில் 9 ரன்களில் நடையைக் கட்ட, ரஸல் - பூயிஷ் சாவ்லா இணை ஏழாவது விக்கெட்டுக்கு ஓரளவு தாக்குப் பிடித்த தருணத்தில், சாவ்லா 8 ரன்களில் தோனியிடம் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகினர்.
மறுமுனையில் தனி ஒருவான களத்தில் இருந்த ரஸல், இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்களை சேர்த்து அரைசதம் விளாசினார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கலில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எட்டியது.