இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகமாக டூ ப்ளஸிஸ் 54 ரன்களும், கேப்டன் தோனி 37 ரன்களும் எடுத்தனர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. அதிரடி வீரர் கெய்ல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் தொடக்க வீரர் ராகுல் - சர்ஃபராஸ்கான் இணை சேர்ந்தது. சிறப்பாக ஆடிய இந்த இணை சென்னை அணியின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. இந்த இணையைப் பிரிக்க முடியாமல் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் திணறினர்.
நிதானமாக ஆடிய இளம் வீரர் சர்ஃபராஸ்கான் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் ராகுல் 11ஆவது அரைசதத்தை கடந்தார்.
கடைசி 18 பந்துகளில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. இதனையடுத்து, அதிரடியாக ஆடிய ராகுல் 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆட்டம் பரபரப்பானது.
பின்னர் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் மில்லர் களமிறங்கினார். கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை வீசிய சாஹர் தொடர்ந்து இரண்டு நோ-பால்களை வீச 9 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் மில்லர் 6 ரன்களில் ஆட்டமிழக்க மந்தீப் சிங் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட, அறிமுக வீரர் குஜிலிஜின் பந்துவீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் சர்ஃபராஸ்கான் ஆட்டமிழக்க, சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன், குஜிலஜின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியை அடுத்து, சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.