ஹைதராபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகளை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் விதிமுறையை சோதனை அடிப்படையில் வர முடிவு செய்துள்ளது.
ஸ்டாப் கிளாக் விதிமுறை: ஸ்டாப் கிளாக் விதிமுறை என்பது பந்து வீசும் அணி, ஒரு ஓவர் முடிந்தவுடன் 60 விநாடிகளில் அடுத்த ஓவர் வீச தொடங்கிட வேண்டும். ஒரு வேளை அந்த அணி இந்த கட்டுப்பாட்டை 3 முறைக்கு மேல் மீறினால் 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.
இந்த விதிமுறைகள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வரும் டிசம்பர் 2023 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் விளையாட்டின் நேரத்தை குறைக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக ஐசிசி கூறுகிறது.
திருநங்கைகள் விளையாடத் தடை: ஆண்களாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதித்துள்ளது. அதாவது ஆண் எந்த வகையான பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டு இருந்தாலும் சர்வதேச மகளிர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த விதிமுறை மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் ஐசிசி கூறியுள்ளது.
இது குறித்து ஐசிசியின் தலைமை நிர்வாகி ஜெஃப் அல்லார்டிஸ் கூறுகையில் ” பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களில் பாதுகாப்பை பாதுகாப்பு தான் எங்கள் முன்னுரிமை ஆகும். இதன் காரணமாக தான் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இந்த புதிய விதியின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடா அணியில் இடம் பிடித்த முதல் திருநங்கை கிரிக்கெட்டரான டேனியல் மெக்கஹே இனி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சம ஊதியம்: பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என ஐசிசி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆண்களுக்கான போட்டியாக இருந்தாலும், மகளிருக்கான போட்டியாக இருந்தாலும் சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ள ஐசிசி இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளது.
இதையும் படிங்க: IND Vs AUS; வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியாவின் இளம் படை? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!