கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடும் சூப்பர் 4 சுற்று போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறுகிறது.
6 அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4க்கும் தகுதி பெற்றனர். தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறும் 4வது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இலங்கை அணி தனது முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளது.
அதே பார்முடன் இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் சமரவிக்ரமா 93 ரன்கள் விளாசி சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்களின் பங்களிப்புடன் இலங்கை அணி 297 ரன்களை கடந்தது. இதேபோல் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அவர் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை நேற்றை (செப். 11) பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளது. இதனால் இலங்கை அணியை இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஊதித் தள்ளிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் இலங்கை அணிக்கு இமாலய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்து விடலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஏறத்தாழ இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இருக்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் உறுதியாக இறுதி சுற்றுக்கு முன்னேறி விடும். இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணி எது என்பது தெரிய வரும் என எதிர்பார்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் :
இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐய்யர், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா
இலங்கை : குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனக (கேப்டன்), பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, குசல் பெரேரா, பிரமோதுஷான்டோ, பினுர பெரேரா, பிரமோதுஷான்டோ, ஹேமந்தா.
இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நேரலை தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என இலங்கை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் இன்றைய ஆட்டத்திற்கு ரிசர்வ் டே கிடையாது என்பதால் ஆட்டத்தின் முடிவு மற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் முடிவுகளை தீர்மானிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : India Vs Pakistan Asia Cup : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. இந்திய சூழலில் சுருண்டது பாகிஸ்தான்!