ஹைதராபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர், உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் வீரர், 30 சதங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்தான் சுனில் கவாஸ்கர்.
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர், மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் குறித்து பலரும் அறியாத சில சுவாரசிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
மருத்துவமனையில் மாற்றப்பட்ட கவாஸ்கர்
நாம் சிறுவயதில் சேட்டைகள் செய்யும்போதெல்லாம், 'உன்னை ஆஸ்பத்திரியிலே இருந்து மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்க' என நமது உறவுக்காரர்கள் கேலியாக சொல்வதை கேட்டிருப்போம்.
இதுபோன்ற வேடிக்கையான நிகழ்வு கவாஸ்கருக்கு நிகழ்ந்திருக்கிறது. கவாஸ்கர் பிறந்த அன்று மருத்துவமனைக்கு வந்து பார்த்த அவரது மாமா, அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்தபோது, கவாஸ்கருக்கு பதில் வேறு ஒரு குழந்தையை கொஞ்சக்கொடுத்துள்ளனர்.
முந்தைய தினம், கொஞ்சிய குழந்தையின் காதருகே இருந்த மச்சத்தைப் பார்த்து வைத்திருந்த அவர், இன்று தனது கையில் கொடுத்த குழந்தைக்கு காதருகே மச்சம் இல்லாதை கவனித்திருக்கிறார். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதனைத் தெரிவித்து இது என் மருமகன் இல்லை என்றுள்ளார்.
பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம், பிறந்து இரண்டே நாளான கவாஸ்கரைத் தேடியது. அப்போது, பிரசவ வார்டில் மீனவப் பெண் அருகே கவாஸ்கர் வைக்கப்பட்டிருந்தார்.
இது செவிலியரின் தவறால் நிகழ்ந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், அன்று தனது மாமா மட்டும் தன்னை அடையாளம் காணமால் இருந்திருந்தால், தான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கமாட்டேன், மாறாக மீனவராக ஆகியிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் போல் முடிவளர்க்க ஆசை!
கவாஸ்கரின் சமகாலத்தில் அனைவரையும் கவரக்கூடிய வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சேப்பல் இருந்தார். அவரைப் போலவே தன்னுடைய முடியையும் வளர்த்துவந்தார் கவாஸ்கர். இருப்பினும், சேப்பல் போல் முடி வளர்க்க மிகவும் சிரமப்பட்ட கவாஸ்கர், தான் நினைத்ததுபோல் முடி வளராததால், அந்த முடிவை கைவிட்டார்.
சிறந்த பேட்ஸ்மனகா அறியப்படும் கவாஸ்கர் நல்ல எழுத்தாளுரும் கூட. சன்னி டேஸ், சிலைகள், ஒரு நாள் அதிசயங்கள் உள்ளிட்ட நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த எழுதும் பழக்கம் சக வீரர்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை பெற்றுதந்ததோடு, நான்கு புத்தகங்களை எழுதிய ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நடிகர் கவாஸ்கர்
சாவ்லி பிரேமாச்சி என்ற மராத்தி படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப்படத்தில் வழக்கமான கதாநாயகர்கள் செய்வதுபோல் காதலிக்காக மரத்தைச் சுற்றிவருவது, நடனமாடுவது உள்ளிட்டவற்றை செய்துள்ளார். மலாமல் என்ற இந்திப் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார். அசுர வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர்களை கண்டுகூட பயப்படாத கவாஸ்கர் நாய்களுக்கு ரொம்பவே பயப்படக்கூடியவர்.
1983ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போதும் கவாஸ்கரின் பங்களிப்பு முக்கியமானது. இவர் பிசிசிஐயின் இடைக்கால தலைவராகவும் இருந்துள்ளார். இவரின் மகன் ரோகன் கவாஸ்கரும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார் என்பது நினைவு கூரத்தக்கது.
ஹேப்பி பர்த்டே கவாஸ்கர்!
இதையும் படிங்க: WTC FINAL: சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல சரியான வாய்ப்பு - சுனில் கவாஸ்கர்