அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இத்தொடரின் 36வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் (AUS vs ENG) மோதி வருகின்றனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஹெட் 11 ரன்களிலும், வார்னர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின், ஸ்மீத் - லபுசேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து கொண்டிருந்தது. சிறப்பாக விளையாடி வந்த ஸ்மீத் அரைசதம் நெருங்க, அடில் ரஷித் பந்து வீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் வெளியேறினார். மறுபக்கம் லபுசேன் அரைசதம் கடந்து 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 47, மார்கஸ் ஸ்டோனிஸ் 35, பேட் கம்மின்ஸ் 10, மிட்செல் ஸ்டார்க் 10, ஆடம் ஸ்ம்பா 29 ரன்கள் என ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து பந்து வீச்சில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்னான ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த ஜோ ரூட்டும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ் - டேவிட் மலான் கூட்டணி இணைந்தது, இவர்கள் நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினர். அரைசதம் விளாசிய டேவிட் மலான் சிக்ஸ் அடிக்க முயன்று ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து 50 ரன்களில் வெளியேறினார். அதன்பின் பென் ஸ்டோக்ஸ் 64, மொயின் அலி, 42, லிவிங்ஸ்டன் 2, கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 48.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானின் ' 100 கிளப்பில்” இணைந்தார் முஜீப் உர் ரஹ்மான்