கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பை தொடரும் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இது குறித்த ஐசிசியின் முடிவை ஜூன் பத்தாம் தேதி இறுதி செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், டி-20 உலகக்கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்த வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அடுத்த வாரம் முதல் நியூசிலாந்தில் அனைத்து விதமான தகுந்த இடைவெளி நடவடிக்கைகளும் நீக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்(Jacinda Ardern) தெரிவித்திருந்தார். இதனால் நாம் டி20 உலக கோப்பை தொடரை அங்கு நடத்தலாமோ?' என்று பதிவிட்டுள்ளார்.