உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி களமிறங்கிய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அதன்பின்பு பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அப்போட்டியில் அனைத்து வீரர்களின் பங்களிப்பாலும் 348 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பெற்றுவந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதேபோன்று இலங்கை அணியும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், 136 ரன்களுக்கு ஆட்டமிழந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணி 201 ரன்களுக்கு சுருண்டது. எனினும் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியில் சிறப்பான பந்துவீச்சால் டக்வொர்த் லீவிஸ் முறையில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில், அந்த அணியின் இமாம்-உல்-ஹக், பக்ஹர் ஜமான், பாபர் அஸ்ஸாம், ஹபீஸ் என பேட்டிங் வரிசை கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பந்துவீச்சில் மொகமது ஆமீர், ஷதாப் கான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். வஹாப் ரியாஸ் கடந்த போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்துவீசினார். எனவே பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் அதே அணியுடன்தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் இரண்டு போட்டியிலும் குசல் பெரேரா, லகிரு திரிமான்னே தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால் பந்துவீச்சில் மலிங்கா, நுவான் பிரதீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்துவதால் அந்த அணி பந்துவீச்சில் பலமாகவே உள்ளது. இலங்கை அணியும் அதே அணியுடன் களமிறங்கவே வாய்ப்புகள் உள்ளன.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி இலங்கை அணியிடம் தோல்வியுற்றதில்லை என்ற சாதனையுடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங் கைக்கொடுத்தால் பாகிஸ்தானின் சாதனையை தகர்க்கலாம். இரு அணிகளும் இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய முற்படும் இந்த ஆட்டம் பிரிஸ்டலில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி மூன்று மணிக்கு தொடங்குகிறது.