இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை எடுக்க இங்கிலாந்து அணியோ தனது முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு சுருண்டது.
இதைத்தொடர்ந்து, 179 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியா 359 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.
முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து அணியா 359 ரன்களை சேஸ் செய்யப்போகிறது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இப்போட்டி எடுத்துக்காட்டாக மாறியது.
286 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு இப்போட்டியில் வெற்றிபெற 73 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆஸ்திரேலியாவே வெற்றிபெறும் என பெரும்பாலானோர் நினைத்தனர். அந்த சமயமத்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பென் ஸ்டோக்ஸ், தனி ஒருவனாக போராடி இங்கிலாந்தை த்ரில் வெற்றிபெற வைத்தார்.
இதனால், இங்கிலாந்து அணி 125.4 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை எடுத்தது. இப்போட்டியில், பென் ஸ்டோக்ஸ் 11 பவுண்ட்ரி, 8 சிக்சர் என 135 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இவரது ஆட்டம் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியது மட்டுமில்லாமல் வரலாற்றின் சிறந்தடெஸ்ட் போட்டிகளில் ஒன்றாகவும் மாற்றியது.
பலரும் இப்போட்டிக் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில, ’முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும், வாழ்க்கையில் எப்போதுமே இரண்டாவது இன்னிங்ஸ் இருக்கும் என்பதை டெஸ்ட் கிரிக்கெட் நமக்கு தெரிவித்துள்ளது. ஆகவே, போராட்டத்தை மட்டும் கைவிடாதீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.