டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில், ஒன்பது அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றனர். அந்த அணிகள் மூன்று டெஸ்ட் தொடரை சொந்த மண்ணிலும், மற்ற மூன்றை அந்நிய மண்ணிலும் விளையாடுகின்றன.
இந்தத் தொடரின் இறுதியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்தாண்டு லண்டன் லார்ட்ஸில் ஜூன் 10 முதல் 14 வரை நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் தொடங்கவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், மற்ற ஐசிசி தொடர்களான ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பையைவிட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரே சிறந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் லார்ட்ஸில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் விளையாட வேண்டும் என நினைக்கும். எங்களது நோக்கமும் அதேதான்.
நாங்கள் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், முதலில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவதில்தான் முழு கவனமும் உள்ளது. அதன்பின் நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்வோம் என நம்புகிறேன்.
தற்போதைய சூழலில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பெரும்பாலான அணிகள் டிரா செய்வதைவிட வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் த்ரிலிங்காக இருந்தது.
குறிப்பாக, கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அந்நிய மண்ணில் நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடவிருப்பதால் நிச்சயம் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவோம்" என்றார்.
நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 196 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர்த்து, இன்னும் அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இதையும் படிங்க: மூன்று வருடங்களுக்குப் பின் ஓய்வு குறித்து பேசலாம்' - கோலி