கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வைரஸ் பரவலின் தாக்கம் குறைய தொடங்கியதைத் தொடர்ந்து வீரர்கள் பயிற்சிக்கு திரும்பவும், விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்களின்றி நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
பின்னர், தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து 50 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்கவும் அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, மகளிருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
அதன் ஒருபகுதியாக மார்ச் 11ஆம் தேதி முதல் மகளிருக்கான ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (பிப்.27) அறிவித்துள்ளார். இத்தொடரை சூரத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், இந்தூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஆறுநகரங்களில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடும் அணிகள் மார்ச் 4ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைதானங்களுக்கு செல்லவேண்டும். அங்கு அவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பின் அந்தந்த மாநிலங்களின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள படி தனிமைப்படுத்தப்படுவர். நாக் அவுட் சுற்றுக்கான நான்கு மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!