சவுரவ் கங்குலி என்று பேச்சு எழுந்தால், ரசிகர்களுக்கு அவர் லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்று தனது ஜெர்சியை கழற்றி சுழற்றிய சம்பவம் தான் நினைவுக்கு வரும். அந்தக் கொண்டாட்டம், இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றுச் சின்னமாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் ஐசிசி சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் எடுத்த பேட்டியில் பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பங்கேற்றார். அந்தப் பேட்டியில் நாட் வெஸ்ட் தொடர் வெற்றி, 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகியவை பற்றி அவர் மனம் திறந்துள்ளார்.
அதில், ''நாட் வெஸ்ட் தொடரிம் பெற்ற வெற்றியின் நிமிடங்கள் மிகவும் சிறந்தவை. அது போன்ற சிறந்த வெற்றியை நாம் அடையும்போது, கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுவோம். அதனை அனைவரும் செய்தோம். எனது வாழ்வில் பங்கேற்ற சிறந்த போட்டிகளில் அதுவும் ஒன்று.
சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் வெல்வது என்பது தனித்துவமானது. அந்த உணர்வை அடுத்த இங்கிலாந்து பயணத்தின்போது நீங்களும் உணர்வீர்கள்.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி என்பது அந்த சமயத்தின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் அடைந்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து அனைத்து அணிகளையும் நாங்கள் வென்றோம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இங்கிலாந்து தொடர் எங்களுக்கு ஆஷஸ் போன்றது' - கீமார் ரோச்!