ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்திய அணியுடனான தொடரில் விளையாட காத்திருக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்மித், ‘இந்திய கிரிக்கெட் அணியானது உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்று. அவர்களுடன் இந்தாண்டு இறுதியில் நாங்கள் விளையாடுவதை எண்ணி காத்திருக்க முடியவில்லை. ஆவல் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த தொடராக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனான நட்பு குறித்து பேசிய ஸ்மித், ‘விராட் கோலியிடம் நான் குறுஞ்செய்திகள் மூலம் உரையடியுள்ளேன். அப்போது நாங்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தாக்கங்கள் குறித்து விவாதித்தோம். என்னை பொறுத்தவரை அவர் மிகவும் சிறப்பான ஒரு வீரர் என்பதில் ஐயமில்லை. நாங்கள் இருவரும் அணியின் வெற்றிக்காக களத்தில் கடுமையாக விளையாடுகிறோம். மற்றபடி களத்திற்கு வெளியே நாங்கள் சிறந்த நண்பர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஆக்டொபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.