ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரைக் எர்வின் 85 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்தேனியா ஐந்து, சுராங்கா லக்மல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
![Srilanka defeats zimbabwe by ten wickets in first test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5817367_m.jpg)
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி ஏஞ்சலோ மேத்யூஸின் இரட்டை சதத்தால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 468 பந்துகளில் 16 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 200 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.
![Srilanka defeats zimbabwe by ten wickets in first test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5817367_mk.jpg)
இதையடுத்து, 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஜிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 92 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 39, பிரன்டன் டெய்லர் 38 ரன்கள் அடித்தனர். இலங்கை அணி தரப்பில் சுராங்கா லக்மல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 14 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை மூன்றே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னான்டோ நான்கு ரன்களிலும், கேப்டன் திமுத் கருணாரத்னே 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம், இலங்கை அணி இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
![Srilanka defeats zimbabwe by ten wickets in first test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5817367_p.jpg)
இப்போட்டியில் இரட்டை சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி ஜனவரி 27ஆம் தேதி ஹராரேவில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ‘கோலி எனக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியமே இல்லை... ஆனாலும் அளித்தார்’ - ஸ்டீவ் ஸ்மித் ஷேரிங்ஸ்!