இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் அறிமுக வீரர்களாக முகமது சிராஜ், சுப்மன் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி அடைந்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் இந்தியா சார்பில் அறிமுக வீரராக களமிறங்கிய முகமது சிராஜ் 36.3 ஓவர்கள் வீசி 73 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைக் (இரண்டு இன்னிங்ஸிலும்) கைப்பற்றினார்.
இதன்மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நபர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய முகமது ஷமி 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டி குறித்து பேசிய முகமது சிராஜ், "என்னைச் சுற்றி மூத்த வீரர்களின் உதவி எப்போதும் இருந்தது. அதிலும் ஜஸ்பிரித் பும்ரா ஓவ்வொரு ஓவரின்போது என்னிடம் வந்து எனக்கு நம்பிக்கையளித்தார், அவர் ஒவ்வொரு பந்திலும் என்னை கவனம் செலுத்தச் சொன்னார்.
மேலும் ‘நீங்கள் நன்றாகப் பந்து வீசிவருகிறாய், அதனைத் தொடர்ந்து செய்யுங்கள்’ என்று என்னிடன் கூறினார். அவர் கூறிய அறிவுரைகளை நான் அப்படியே பின்பற்றினேன்" என்று தெரிவித்தார்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரஹானே ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் அவருக்கு ஜானி முல்லாக் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட டூ பிளேசிஸ்!