இந்தியா, பாகிஸ்தானில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று எதிர்ப்புக்கு நிதி திரட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பரிந்துரைத்தார்.
இதற்கு கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என்றும், தற்போதை சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் எனவும் பதிலடி தந்தார். இந்நிலையில், கபில்தேவின் கருத்து குறித்து பேசிய அக்தர், "நான் என்ன சொன்னேன் என்பதை கபில்தேவ் அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, நாம் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அதனால் அதை சரிசெய்யும் விதமாக, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தி நாம் ஒன்று சேர வேண்டிய நேரம் இது. பொருளதாரத்தின் அடிப்படையில் நான் பெரிய கண்ணோட்டத்துடன்தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.
நிச்சயமாக இந்தியா - பாக் தொடருக்கு ரசிகர்கள் அதிகளவில் வருகைத் தருவர் என்பதால் ஒரே போட்டியில் அதிகமான நிதியை திரட்டலாம். கபில்தேவ் அவர்கள் எங்களுக்குப் பணம் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் நாம் அனைவருக்கும் பணம் தேவை. எனவே எனது பரிந்துரை விரைவில் பரிசீலிக்கப்படும் என, நான் நினைக்கிறேன்.
பெருமளவில் நிதி திரட்ட நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் அடைய, இந்தத் தொடர் உதவும் என்ற நோக்கத்தில்தான் நான் இதைக் கூறினேன்" என பதிலடி தந்துள்ளார்.
இதையும் படிங்க: தோனிக்கு கடமைப்பட்டுள்ளேன் - வாட்சன்