வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது ஐந்து டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவருகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஷஃபாலி வர்மா, நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்தார்.
இதனால், இந்திய அணி இப்போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா 49 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் என 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், சர்வதேச அளவிலான போட்டியில் இளம் வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் சச்சினின் 30 வருட சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
1989இல் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் அரைசதம் அடித்திருந்தார். தனது 16 வயது 213 நாட்களில் சச்சின் இச்சாதனை படைத்த நிலையில், ஷஃபாலி வர்மா தனது 15 வயது 285 நாட்களில் அதை முறியடித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர்/வீராங்கனைகளின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஜோமாரி லோக்டன்பர்க் தனது 14 வயதில் அரைசதம் அடித்து இந்தச் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.