மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் ஃபெட் கோப்பைப் போட்டியில் சிறப்பாக ஆடியதற்காக ஒவ்வொரு ஃபெட் கோப்பை வருடமும் ஹார்ட் விருது வழங்கப்படும். 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை இதுவரை இந்திய வீரர்கள் யாரும் வென்றதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிய மற்றும் ஓசேனியா மண்டலங்களிளிலிருந்து ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்காக இந்தியாவின் சானியா மிர்சாவும், 16 வயதான வீராங்கனை பிரிஸ்காவும் பரிந்துரைக்கப்பட்டனர்.
மே ஒன்றாம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட இணையதள வாக்கெடுப்பில் 16 ஆயிரத்து 985 வாக்குகள் பெற்று சானியா மிர்சா முதல்முறையாக வென்றார். இதுகுறித்து சானியா மிர்சா பேசுகையில், '' ஃபெட் கோப்பையின் ஹார்ட் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்பதில் பெருமைக்கொள்கிறேன். இந்த விருதினை இந்திய மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் இந்தியாவுக்காக இன்னும் சிறப்பாக ஆட விரும்புகிறேன்.
இந்த விருதுக்காக எனக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனை தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். கரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் இந்த கடினமான சூழலில் எனது சிறு பங்களிப்பு உதவும் என நினைக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: தான் ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது - சானியா மிர்சா