சென்சுரியன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நியூசிலாந்து - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இந்தியா, தென் ஆப்பரிக்கா - இலங்கை ஆகிய அணிகளுக்கிடையே இன்று (டிச. 26) தொடங்கியுள்ளது.
தென் ஆப்பரிக்காவிலுள்ள சென்சுரியன் நகரில் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென் ஆப்பரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
54 ரன்களில் கேப்டன் கருணரத்னே, குசல் பெரரே, குசல் மென்டில் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் - தனஞ்ஜெயா டி சில்வா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதனமாக விளையாடி இவர்கள் இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பாக ஆடி வந்த டி சில்வா 79 ரன்கள் எடுத்திருந்தபோது இடுப்பு தசை பிடிப்பு காரணமாக பேட்டிங்கை மேலும் தொடர முடியாமல் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் 85 ரன்கள் எடுத்த நிலையில் சண்டிமாலை வீழ்த்தினார் தென் ஆப்பரிக்காவின் மித வேகப்பந்து வீச்சாளர் வியான் முல்டர்.
இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லா பொறுப்புடன் விளையாட 49 ரன்கள் எடுத்து, முல்டர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். இதையடுத்து இன்றைய ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 340 ரன்கள் குவித்துள்ளது.
தற்போது ஷனகா 25, ரஜிதா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பரிக்கா தரப்பில் முல்டர் 3, நோர்ஜே, ஷிபம்லா, இங்கிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: வில்லியம்சன், டெய்லர் அதிரடியால் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து!