விளையாட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிறந்த வீரர்கள் என அந்த அணி அழைக்கப்படும். அந்தவகையில், கிரிக்கெட்டில் 1950, 60, 70களில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேரி சோபர்ஸால்தான் அவ்வாறு அழைக்கப்பட்டது.
இடதுகை பேட்ஸ்மேனும், இடது கை பந்துவீச்சாளருமான இவர் டெஸ்ட் போட்டியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.
பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு, மிரட்டலான ஃபீல்டிங்கிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த பெரும் பங்காற்றினார்.
இவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் இளவயது ஆல்ரவுண்டராக இவர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றோடு 66 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர் மார்ச் 30, 1954இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்மூலம் தனது 17ஆவது வயதில் அறிமுகமானார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய வீரரும் இவரே. 1958இல் கிங்ஸ்டனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இவர் இறுதியாக 365 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனி ஒருவர் அதிக ஸ்கோர் அடித்த இங்கிலாந்து வீரர் லென் ஹூட்டானின் (364) சாதனையை முறியடித்து அசத்தினார்.
இவரது இந்தச் சாதனை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு முறியடிக்கப்பட்டது. அதேசமயம், கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர் அடித்த முதல் வீரரும் கேரி சோபர்ஸ்தான். 1968இல் முதல் தர போட்டியில் இச்சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடியாக விளையாடிய இவர், ஒரேயோரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1954 முதல் 1974 வரை இந்த 20 ஆண்டுகளில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 26 சதங்கள், 30 அரைசதங்கள் உட்பட 8032 ரன்களை குவித்துள்ளார்.
அவரது பேட்டிங் சராசரி 57.78 ரன்களாகும். அதேபோல, பவுலிங்கில் 235 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இவருக்கு 2009இல் ஐசிசி ஆல் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!