13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவருகின்றன. இதில், காத்மண்டுவில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் நேபாளம் - மாலத்தீவு அணிகள் மோதின. டாஸ் வென்ற மாலத்தீவு அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தங்களது அணியை நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் சாய்த்துவிடுவார் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாமல் போனது.
மாலத்தீவு அணியின் தொடக்க வீராங்கனை ஹம்சா நியாஸ் இரண்டு பவுண்டரிகள் உள்பட ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருகட்டத்தில் 2.4 ஓவர்களில் 11 ரன்கள் எடுத்திருந்த மாலத்தீவு அணி, அஞ்சலி சந்தின் பந்துவீச்சினால், சீட்டுக்கட்டு சரிவதைப்போல் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. இதனால், மால்ததீவு அணி 10.1 ஓவர்களில் 16 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. மாலத்தீவு அணியில் ஹம்சா நியாஸ் ஒன்பது, ஹஃப்ஸா அப்துல்லாஹ் நான்கு ஆகியோரைத் தவிர அணியிலிருந்த மற்ற வீராங்கனைகள் வரிசைக் கட்டி டக் அவுட்டாகினர்.
இதில், 2.1 ஓவர்கள் அதாவது 13 பந்துகள் வீசிய அஞ்சலி சந்த், ஒரு ரன்கூட வழங்காமல் ஒரு ஹாட்ரிக் உள்பட ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வியக்கவைத்துள்ளார். இதன் மூலம், மகளிர் டி20 போட்டியில் குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதனால், மலேசிய வீராங்கனை மாஸ் எலிசாவின் (மூன்று ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள்) சாதனை முறியடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நேபாளம் அணி 0.5 ஓவர்களில் 17 ரன்களை எடுத்து இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஞ்சலி சந்த் ஆட்டநாயகி விருதை பெற்றார்.
இதையும் படிங்க: டீம்ல இருந்த 11 பேரும் டக்... கிரிக்கெட் போட்டியில் நடந்த அதிசயத்திலும் அதிசயம்!
ஆடவர் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் அஜந்தா மெண்டிஸின் சாதனையை இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் முறியடித்திருந்தார். வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் ஹாட்ரிக் உள்பட ஏழு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தச் சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.