2019ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020ஆம் ஆண்டு அக்டோபர் வரையிலான இந்திய வீரர்களின் ஒப்பந்தங்கள் குறித்து முழுமையான விவரங்களை இன்று பிசிசிஐ வெளியிட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என அனைத்து தரப்பிலும் தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அலுவலர் பேசுகையில், ''பிசிசிஐயின் ஒப்பந்த விவகாரங்கள் குறித்து தேனியிடம் பேசினோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திலிருந்து தோனி கிரிக்கெட் ஆடவில்லை என்பதால் அவரை ஒப்பந்தத்திலிருந்து நீக்குகிறோம் என தோனியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இந்த ஒப்பந்த விவகாரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது.
தோனியிடம் யார் பேசியது என கேட்கப்பட்ட கேள்விக்கு, ’பிசிசிஐ அலுவலர் பதில் கூற மறுத்துவிட்டார். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ தோனி இந்திய அணியில் இடம்பிடித்தால், அதற்கேற்ப ஒப்பந்தம் செய்யப்படும்.
அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை டி20 தொடர் நடக்கவுள்ளது. அதில் சில போட்டிகளில் விளையாடினாலே போதும், அவர் ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியைப் பெறுவார். அவர் சில மாதங்களாக கிரிக்கெட் ஆடவில்லை என்பதால்தான் ஒப்பந்தத்திற்கான தகுதியை இழந்தார்.
பிசிசிஐ ஒப்பந்தம் செய்வதற்கு சில விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த விதிகளின்படி ஒரு வீரர் குறிப்பிட்ட நாள்களில் மூன்று டெஸ்ட் போட்டியிலோ அல்லது எட்டு ஒருநாள் போட்டிகளிலோ விளையாடினால் பிசிசிஐ ஒப்பந்தத்திற்கான தகுதியை பெறுவார்.
இளம் வீரர் ப்ரித்வி ஷா இந்திய அணிக்காக ஏற்கனவே ஆடிவிட்டார். அதனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் ஆடினாலே போதும், தகுதிபெற்றுவிடுவார்’’ என்றார்.
தொடர்ந்து விடுமுறையில் இருக்கும் தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளாரா என்ற கேள்விக்கு, ’’அதற்கான பதில் தோனிக்கு மட்டுமே தெரியும்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தில் தோனி இல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி