இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயீன் அலி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமைவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மான்டி பனேசர், "இந்தியாவில் நிறைய வலதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் ஆல்ரவுண்டர் மோயீன் அலி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணி வீரர்களுக்கு அவர் சவாலாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 'டியூக்ஸ்' பந்துகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 'எஸ்.ஜி' பந்துகளில் விளையாடப்படும் இந்த டெஸ்ட் போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!