கேன் வில்லியம்சன் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரலூம் மறக்க இயலாது. நவீன கிரிக்கெட்டின் அசைக்கமுடியாத உச்சத்தில் இருந்தாலும் தனது ஸ்போர்ட்மேன்ஷிப் குணத்தால் சிறந்த வீரராக ரசிகர்களின் மனதிற்கு என்றும் நெருக்கமாகவே இருந்துவருகிறார்.
நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் அன்று முதல் இன்றுவரை தன் பணியை செவ்வனே செய்துவருகிறார். தனது அசாத்திய பேட்டிங் திறமையினால் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் வில்லியம்சன்.
தனது அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக டக்-அவுட் ஆனார். அதன்பின் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் சதமடித்ததன் மூலம் மிகச் சிறிய வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரரானார் வில்லியம்சன்.
அதே ஆண்டே இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தான் பங்குபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 131 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
2014ஆம் ஆண்டு அணியின் தவிர்க்க முடியாத புள்ளியாக உருவெடுத்தார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் உட்பட 413 ரன்களை விளாசி தொடரை வெல்ல ஆணிவேராக இருந்தார்.
அதன்பின் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடத்தொடங்கினார். தொடர்ந்து 2016 ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வெல்ல வழிவகுத்தவர்.
2018ஆம் ஆண்டு தனது கேப்டன்சிப் மூலம் ஹைதராபாத் அணியை இறுதிவரை அழைத்துச் சென்றார். அந்தத் தொடரில் 735 ரன்களை அடித்து தொடர் நாயகன் விருதையும் தன்வசமாக்கினார்.
2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அத்தொடரில் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை இறுதி போட்டிவரை அழைத்துச்சென்றார். துரதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் கோப்பையை இழந்தது நியூசிலாந்து அணி.
ஆனாலும் அந்தத் தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 578 ரன்களை குவித்த வில்லியம்சன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஐசிசியின் உலக அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் வில்லியம்சன்.
உலகக் கிரிக்கெட் அரங்கில் ரிக்கி பாண்டிங், தோனி, கோலி போன்ற பெயர்களைத் தாண்டி கேப்டன்சி என்றால் அதில் கேன் வில்லியம்சனுக்கென்று எப்போதும் ஒரு தனி இடம் இருக்கும். அதை என்றும் வரலாறு பறைசாற்றும்.
பிறந்தநாள் வாழ்த்துகள் கேன் வில்லியம்சன்!