ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் 19ஆவது ஓவரின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் இறுதிவரை களத்தில் நின்று 44 ரன்களை குவித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக யுஸ்வேந்திர சஹால் களமிறங்கி, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதனையடுத்து போட்டி முடிவுக்கு பின் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா, அணி மருத்துவர்களிடம் தனக்கு தலைசுற்றுவது போலவும், மயக்கம் வருவது போலவும் உள்ளதென கூறியதாக இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய சாம்சன், “இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க்கின் பந்து ஜடேஜாவின் தலையில் பலமாக தாக்கியது. இதில் அவர் காயமடைந்தார். அதன் பின்னர் உடை மாற்று அறைக்கு வந்தவுடன் அணி மருத்துவர் அவரிடம் இப்போது எப்படி உள்ளது என கேட்டார். அதற்கு ஜடேஜா தனக்கு தலை சுற்றுவது போலவும், மயக்கம் வருவது போலவும் உள்ளதாக கூறினார்.
இதையடுத்து ஜடேஜாவிற்கு மருத்துவர்கள் சில சிகிச்சைகளை மேற்கொண்டனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவரது நிலை குறித்து எனக்கு சரியாக எதுவும் தெரியவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் சஹாலை மாற்று வீரராகத் தேர்ந்தெடுத்தோம். அந்த முடிவு எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது” என்றார்.
இதையும் படிங்க:IND vs AUS: மாற்று வீரராக களமிறங்கி அசத்திய சஹால்!