இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
அதில் குறிப்பாக நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் டீன் எல்கரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டிகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கைப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
இவர் இச்சாதனையை தனது 44ஆவது டெஸ்ட் போட்டியிலேயே செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் ரங்கனா ஹெராத், 47 டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது.
மேலும் இவர் இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதையும் படிங்க: #TNPL2019: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசாரணைக் குழு அறிக்கை!