அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடிவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 109 ரன்களும், சேஸ் 51 ரன்களும், சுனில் 38 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பாக கேப்டன் மோர்டசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான தமீம் இக்பால் - சர்கார் இருவரும், பெரிய இலக்கை விரட்டுவதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த நிலையில், சர்கார் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் 80 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
பின்னர் ஷகிப் - ரஹீம் இணை வங்கதேசத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். வங்கதேச அணி 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஷகிப் 61 ரன்களும், ரஹீம் 32 ரன்களும் எடுத்தனர்.