கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர், ஐபிஎல் தொடர் குறித்து தனது சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பட்லர் கூறுகையில், ‘இங்கிலாந்தின் கிரிக்கெட் உயர்ந்ததற்கு ஐபிஎல்தான் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. கடந்து சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் பல வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தானோ என்னவோ இத்தொடர் எனக்கு மிகவும் பிடித்த தொடராக உள்ளது.
மேலும், உலகக்கோப்பைத் தொடரை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தொடர் எதுவென்று கேட்டாலும், அதற்கு ஐபிஎல் என்ற பதிலையே நான் தருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஜோஸ் பட்லர், அதன் பின் 2018ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 45 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள பட்லர், 150 சராசரியுடன் 1386 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ஒரே ஆண்டில் 37 மில்லியன்' - ஃபோர்ப்ஸில் முதலிடம் பிடித்த பிரபல டென்னிஸ் ஸ்டார்!