இது தொடர்பாக பிசிசிஐ செயல்பாடு குழுவினர் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான அலுவலர்களுடன் பிசிசிஐ குழுவினர் தொடர்பில் உள்ளனர். எமிரேட்ஸ், எதிகட் போன்ற விமான சேவை நிறுவனங்கள், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கு தங்களது விமானங்களை மீண்டும் எப்போது இயக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து பேசி வருகின்றனர்.
ஒரு வேளை இந்த விமான சேவைகள் தொடங்கப்படாவிட்டால், தனி விமானங்களை ஏற்பாடு செய்யவேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் செயல்பாடுகள் அனைத்தும் வழக்கமான பாணியிலிருந்து சற்று மாறுதலை பெற்றுள்ளது. அதேபோல் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் தங்குவதற்கான ஹோட்டல்கள் குறித்து தங்களது விருப்பங்களை அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து அவர்களோடு இணைந்து விவாதித்து வருகிறோம்.
ஹோட்டல்களில் ஒரு இரவில் தங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் செலவுகளை குறைக்கும் பொருட்டு, பிசிசிஐ-யும் பேச்சுவார்த்தை நடத்தி ரூ. 6 ஆயிரம் உள்பட வரிகளை கட்டணமாக நிர்ணயிக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றின் அச்சம் பல நாடுகளில் இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில், வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரை 2022ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைப்பதாக ஐசிசி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கோடிகளில் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது.
தற்போது இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகளில் தீவரம் காட்டி வருகிறது. வரும் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை தொடரை நடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே பதிவில் 12 ஆண்டுகால சகாப்தத்தை நினைவுகூர்ந்த கோலி!