இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் இணை களமிறங்கியது. இதில் ரோஹித் சர்மா 10 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் - தவான் இணை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டது. ஒரு முனையில் சிறப்பாக ரன்கள் சேர்த்த தொடக்க வீரர் தவான், ஒருநாள் போட்டிகளில் தனது 28ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தநிலையில், ராகுல் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து தவான் 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
![தவான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5708769_dhawan.jpg)
பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் ஆட்டம் கண்டுள்ளது.
தற்போது இளம் வீரர் ரிஷப் பந்த் - ஜடேஜா இணை நிதானமாக ரன்கள் சேர்த்துவருகிறது. தற்போதுவரை இந்திய அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா: பெரிய ஸ்கோரை நிர்ணயிக்குமா இந்தியா?