சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் முடிவு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியே இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் நடைபெற்ற மிகச்சிறந்ந இறுதிப்போட்டி என்று பல கிரிக்கெட் வல்லுநர்களும், விமர்சகர்களும் தெரிவித்தனர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய அந்த போட்டியின் இறுதிப் பந்து வரை பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றன. இறுதியில் ஐசிசி விதியின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
ஆனால் பவுண்டரிகள் அடிப்படையில் அந்த முடிவை அளித்ததற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். குறிப்பாக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஓவர் த்ரோவிற்கு நடுவர் குமார் தர்மசேனா ஆறு ரன்கள் வழங்கியது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் தான் வழங்கிய தீர்ப்பு தவறு என்பதை போட்டி முடிந்த பின்பே தெரிந்துகொண்டதாகவும் அதற்கு வருந்தவில்லையென்றும் குமார் தர்மசேனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த முடிவு குறித்து பேசியுள்ள ஐசிசியின் பொது மேலாளர் ஜியோஃப் அலார்டைஸ், ”உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அந்த ஓவர் த்ரோவின்போது நடுவர் தர்மசேனா களத்தில் இருந்த மற்றொரு அம்பயரான மரியாஸ் எர்ராஸ்மசிடம் கேட்ட பிறகே அந்த முடிவை எடுத்தார். அம்பயர்கள் போட்டி விதியின்படியே அந்த முடிவை எடுத்தனர் அது சரியான முடிவே.
ஆனால் அன்று மேட்ச் சென்று கொண்டிருந்த சூழல் அம்பயர்களை மூன்றாவது நடுவரிடம் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் இதுபோன்ற முடிவுகளை கள நடுவர்கள் எடுக்கும்போது, மேட்ச் ரெஃப்ரீ அந்த முடிவில் தலையிட முடியாது” என்றார்.
முன்னதாக கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற ஐசிசி வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தின்போது, அலார்டைஸிடம் இரண்டு முறை சமனில் முடிந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் கோப்பையை பகிர்ந்து கொடுத்திருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உலக சாம்யினாக ஒரு அணிதான் இருக்க வேண்டும் என பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.