ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி வீரர் நடராஜன் சிறப்பாக பந்துவீசி தனது அபார திறனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு பெங்களூரு வந்தடைந்தார். இந்த சூழலில் நடராஜன் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு இன்று வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடராஜனை வரவேற்க ஏற்பாடுகளை உறவினர்களும், நண்பர்களும், ரசிகர்களும் செய்துவந்தனர்.
ஊர் எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க அவரை ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வரவும் ஊர் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வரவேற்பு நிகழ்வுகளை ரத்துசெய்ய சேலம் மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. எளிமையான முறையில் பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து சின்னப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடை அகற்றப்பட்டது. ஊர் மக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என பல தரப்பினரும் நடராஜனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடராஜன் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து வைக்க வேண்டும் என நடராஜனின் வீட்டிற்கு வந்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என யாரும் நேரில் வந்து நடராஜனை சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்து சென்றுள்ளனர்.
நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.