இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்த சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனிடையே பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் செப். மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரோடு தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் பற்றி அனைத்து கேள்விகளுக்கும் கடுமையான விமர்சனங்களை வைக்கும் கம்பீர் தோனி பற்றி பேசியுள்ளார்.
அதில், ''வயது என்பது வெறும் நம்பர் தான். நல்ல ஃபார்மில் இருந்து, பந்துகளை நன்றாக ஹிட் செய்தால் போதும். கிரிக்கெட்டை ரசித்து ஆட வேண்டும். அப்படி அவர் ரசித்து ஆடினால் இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று நினைத்தால் அவர் நிச்சயம் ஆடலாம். அதுவும் 6 மற்றும் 7ஆவது இடங்களில் களமிறங்கி இந்திய அணிக்காக செய்தால், அவர் நிச்சயம் ஆட வேண்டும்.
வயதின் காரணமாக தோனியின் ஓய்வு பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் ஓய்வு என்பது விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட விஷயம். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எப்படி தனிப்பட்ட விஷயமோ, அதேபோல் ஓய்வும் தனிப்பட்ட விஷயம் தான்.
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது நல்ல விஷயம் தான். அந்த மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதே நல்ல அனுபவமாக இருக்கும். அதேபோல் நாட்டில் உள்ள மக்களின் மனநிலையை உளவியல் ரீதியாக மாற்ற ஐபிஎல் தொடருக்கு வலிமை உண்டு. அதனால் இந்த ஐபிஎல் தொடர் அணிகளுக்காகவோ, கொண்டாட்டத்திற்காகவோ இல்லை. இது நாட்டுக்கானது, மக்களுக்கானது. நடந்து முடிந்த அனைத்து ஐபிஎல் தொடர்களை விடவும், இந்த ஐபிஎல் தொடர் மிக முக்கியமானது'' என்றார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் சம்பளம் பட்டியல்!