ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் மிகச்சிறந்த இடக்கை பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார். ஆஸ்திரேலிய ஒருநாள், டெஸ்ட், டி20 அணிக்காக களமிறங்கிய இவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இதனிடையே கில்கிறிஸ்ட் சமீபத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் தொடர் குறித்து நினைவுகூர்ந்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் டெஸ்ட் தொடரில் கங்குலி தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் அபார எழுச்சியைக் கண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த வி.வி.எஸ். லக்ஷ்மண் - ராகுல் டிராவிட் இணை ஐந்தாவது விக்கெட்டுக்கு 376 ரன்கள் சேர்த்து மிரட்டியது. அவர்கள் அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை விழிபிதுங்க வைத்தனர்.
இந்தப் போட்டி குறித்து கில்கிறிஸ்ட், "மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்தான் சதம் அடித்து பின் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றபின் இந்திய பந்துவீச்சை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்று எண்ணினேன். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் அதை தவறு என ஹர்பஜன் பந்துவீச்சின் மூலம் தெரிந்துகொண்டேன்" எனத் தெரிவித்தார்.
அந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் நான்கு முறை ஹர்பஜன் பந்தில் தான் ஆட்டமிழந்ததை நினைவுகூர்ந்த கில்கிறிஸ்ட், ஹர்பஜன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பழிவாங்கும் எதிரி என்று கூறினார். மேலும் தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங், இலங்கையின் சுழல் நாயகன் முத்தையா முரளிதரன் ஆகியோரே மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் என்றார்.