இந்திய அணியின் கேப்டனும், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரருமான விராட் கோலி, தனது அசத்தலான பேட்டிங் திறனால் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சில சமயங்களில் மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணி படுதோல்வி:
மேலும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றியில் இந்திய அணி எடுத்த மிக குறைந்த ரன்னாகவும் இது பதிவானது. அதிலும் இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களைக்கூட தொடவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
விராட் கோலி விடுப்பு:
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிச.26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. மேலும், தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார் விராட் கோலி. இப்போட்டியில் அஜிங்கியா ரஹானே இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
சர்வதேச போட்டியில் சதம் ஏதுமில்லை:
இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் விராட் கோலி, 2020ஆம் ஆண்டில் 21 சர்வதேச போட்டிகளில் விளையாடியும், ஒரு சதத்தைக் கூட பதிவு செய்யாமல் இந்த ஆண்டை நிறைவு செய்துள்ளார்.
மேலும், 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, சதமடிக்காமல் ஒரு ஆண்டை நிறைவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
2008ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 350க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி 20ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இதில் 70 சதங்கள் (டெஸ்டில் 27, ஒருநாளில் 43 சதங்கள்) அடங்கும்.
இதையும் படிங்க:மருத்துவமனையில் முகமது ஷமி; அடுத்த போட்டியில் பங்கேற்பாரா?