இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியானது மான்செஸ்டர் நகரில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம், ஃபக்கர் சமான் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 72 ரன்களை எடுத்தது. இதில் சிறப்பாக விளையாடிய பாபர் ஆசாம், சர்வதேச டி20 போட்டியில் தனது 14ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய முகமது ஹபீஸ், அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 69 ரன்களையும், பாபர் ஆசாம் 56 ரன்களை எடுத்தனர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 65 ரன்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் இயன் மோர்கன் - டேவிட் மாலன் இணை எதிரணியின் பந்துவீச்சை நான்கு திசையிலும் பறக்கவிட்டனர். இருவரும் அதிரடியில் மிரட்ட, இங்கிலாந்து அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில் 19.1 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் மோர்கன் 66 ரன்களையும், டேவிட் மாலன் 54 ரன்களையும் எடுத்தனர்.
மேலும், இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேசமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:பாலன் டி’ஓர் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் அதை கைப்பற்றியிருப்பேன் - லெவாண்டோவ்ஸ்கி!