கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 21ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 700-க்கும் மேற்பட்டோ உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் தோனியைக் காண ஆவலுடன் இருந்த ரசிகர்களும், இனி தோனி இந்திய அணிக்காக எப்போது விளையாடுவார்? என்ற கேள்வியை முன்வைத்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினால் தங்களது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்கள், சமூக வலைதளங்களில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தும் வருகின்றனர். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் - ரோகித் சர்மாவுடனான நேர்காணலின்போது, ரசிகர் ஒருவர் தோனி எப்போது அணிக்குத் திரும்புவர்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, ‘நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து தோனியைப் பற்றி எங்களிடம் எதுவும் கேட்காதீர். வேண்டுமென்றால் நீங்களே அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எங்களுக்கும் அதுகுறித்து ஏதும் தெரியாது’ என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “இப்போது நீங்கள் தோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரா, மாட்டாரா என்று தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதானே. என்னைப் பொறுத்தவரையில் தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அவர் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றதே இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசி தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஓய்வில் இருந்துவருகிறார். மேலும் அவர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கை, தற்போது ஹர்பஜன் சிங் கூறிய பதிலால் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க:தற்போதுள்ள கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகவும் நிலையான வீரர் - காகிசோ ரபாடா!