இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஃபீல்டர்களின் பட்டியலில், முதல் இரண்டு இடங்களில் நிச்சயம் யுவராஜ் சிங், முகமது கைஃப் ஆகிய இருவரும் இடம்பிடிப்பர். தென் ஆப்பிரிக்காவின் ஃபீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸின் சமகாலத்தில் தங்களது சிறப்பான ஃபீல்டிங் திறனால் தலைசிறந்த ஃபீல்டர்களாக அணியில் வலம்வந்தனர்.
பாயிண்ட் திசையில் யுவராஜ் சிங்கும், கவர் திசையில் முகமது கைஃப்பும் இருந்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஆஃப் சைட்டில் ரன்கள் அடிக்கவே அஞ்சுவர். அவர்களுக்கு பிறகு தற்போதைய இந்திய அணியில் கோலி, ஜடேஜா ஆகியோர் ஃபீல்டிங்கில் அசத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்களின் ஃபீல்டிங் திறன் குறித்து பேசிய முகமது கைஃப்,
"ஒரு முழுமையான ஃபீல்டராக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் பந்துகளை நன்றாக கேட்ச் பிடிக்க வேண்டும். பந்துகளை குறிபார்த்து டைரெக்ட் ஹிட் அடிப்பதில் துல்லியமாக இருக்க வேண்டும். மேலும் தரையில் வேகமாக உருண்டு வரும் பந்தை பிடிக்க சரியான நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே ஒரு முழுமையான ஃபீல்டராக நீங்கள் அறியப்படுவீர்கள்.
நாங்கள் விளையாடிய காலத்தில், நானும் யுவராஜ் சிங்கும் முழுமையான ஃபீல்டர்களாக எங்களது அடையாளத்தை தடம் பதித்தோம். தற்போதைய இந்திய அணியில் நல்ல ஃபீல்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட முழுமையான ஃபீல்டர்களாக அறியப்படவில்லை. இந்திய அணியில் ஜடேஜா நல்ல ஃபீல்டர்தான். கடந்த சில ஆண்டுகளாக தனது ஃபீல்டிங்கில் மேம்பட்டுவருகிறார்.
இருப்பினும் ஒரு வீரர் ஸ்லிப், ஷார்ட் லெக், லாங் ஆன் என எந்த திசையில் நிறுத்தவைக்கப்பட்டாலும் அவர்சிறப்பாக ஃபீல்டிங் செய்ய வேண்டும். ஆனால் இதுதான் இந்திய வீரர்களிடம் தற்போது மிஸ் ஆகிறது. குறிப்பாக, ஸ்லிப் திசையில் இந்திய அணியின் ஃபீல்டிங் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்பிடபள்யூ விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை - இயன் சாப்பல் பரிந்துரை