கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உட்பட பல விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதில் இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடர் இம்மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது, பிறகு கோவிட்-19 பெருந்தொற்றால் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் பரவுதலினால் இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், நாங்கள் வைரஸ் பரவுதலைப் பற்றி கண்காணித்து வருகிறோம். ஆனால் இதுவரை ஐபிஎல் சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் இதுகுறித்தான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசிசிஐ தனது அனைத்து பங்குதாரர்கள், பொதுமக்களின் உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர்பான முடிவுகளைக் கூடிய விரைவில் எடுப்போம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சச்சினுக்கு யூனுஸ் விட்ட கேட்ச்... இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத ஆட்டம்!