கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது மைதானம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ட்ரோன் மூலம் படம்பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்திட பிசிசிஐ அனுமதி கோரியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, 2021இல் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் வழிகாட்டுதலை பின்பற்றி ட்ரோன் பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அம்பர் துபே கூறுகையில், " ட்ரோன் கலாசாரம் நம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. விவசாயம், சுகாதாரம், பேரழிவு மேலாண்மை ஆகியவற்றிலிருந்து விளையாட்டு, பொழுதுபோக்கு வரை விரிவடைந்து வருகிறது.
நாட்டில் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட் போட்டியை படம்பிடிக்க ட்ரோனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ட்ரோன் விதிகள் 2021 குறித்து சட்ட அமைச்சகத்துடனான கலந்துரையாடல் இறுதிக்கட்டத்தில் உள்ளன. மார்ச் 2021க்குள் ஒப்புதல்கள் கிடைக்கப்பெறும். இந்த ட்ரோன் அனுமதியானது வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்" எனத் தெரிவித்தார்.
ட்ரோன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை பிசிசிஐ மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்தத் தரவுகளின் பாதுகாப்பிற்கு பிசிசிஐ மட்டுமே பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் மீட்பு பணிக்கு அளிக்கும் ரிஷப்!