நவீன கிரிக்கெட்டில் மாயக்கார பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ். யார்க்கர் பந்துகளை வீசினாலும் அதை சிக்சருக்கு பறக்க விடும் திறன் படைத்தவர். 360 டிகிரி கோணத்திலும் ஷாட் ஆடக்கூடிய இவரை ரசிகர்கள், 'கிரிக்கெட்டின் 360 சூப்பர்மேன்' என அழைக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2018இல் ஓய்வுப் பெற்றாலும், தொடர்ந்து பல நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்று தனது தடத்தைப் பதித்து வருகிறார். அந்த வகையில், தற்போது 35 வயதான இவர் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரிலும் என்ட்ரி தரவுள்ளார்.
இந்த சீசனுக்கான (2019-20) பிக் பாஷ் டி20 தொடரில் x பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டி வில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சீசனோடு பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் மெக்கல்லம் பிக் பாஷ் டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். இதனால், இவரது ரிப்ளேஸ்மென்டாக அந்த அணிக்கு டி வில்லியர்ஸை தேர்ந்தெடுத்துள்ளது அந்த அணி நிர்வாகம் என்பது தெரிகிறது.
டி வில்லியர்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை அடிக்கடி பார்க்க முடியாது. 360 டிகிரி, சிறந்த கேப்டன் உள்ளிட்ட பல்வேறு திறமைகள் கொண்ட அவர், பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடுவது, பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும். அவருடன் முதல்முறையாக சேர்ந்து பணிபுரிவதில் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் பிற்பாதியில்தான் இவர் விளையாடவுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதேபோல, 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 4395 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
14 சிக்சர்கள்... 188 ரன்கள்... வெறித்தனம் காட்டிய ஆரோன் ஃபின்ச்!